டெல்லி: நீச்சல் குளத்தில் பயிற்சி எடுக்க சென்றபோது சிறுமிகளுக்கு கூட்டு பலாத்காரம்

அனிலின் நண்பரான முனில் குமார் என்பவரும் அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியின் வடக்கே நரேலா புறநகர் பகுதியில் தனியார் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இதில் நீச்சல் அடிப்பது பற்றி கற்று கொள்வதற்காக 12 மற்றும் 9 வயதுடைய 2 சிறுமிகள் சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களை கவனித்து பின்தொடர்ந்து சென்ற, குற்றவாளிகளில் ஒருவரான அனில் குமார் என்பவர், அவர்கள் இருவரையும் தனியாக அறை ஒன்றிக்கு இழுத்து சென்று, அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதன்பின்னர், அனிலின் நண்பரான முனில் குமார் என்பவரும் அறையில் அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால், கொலை செய்து விடுவோம் என அவர்கள் சிறுமிகளை மிரட்டி உள்ளனர்.
எனினும், குடும்பத்தினரிடம் நடந்த விசயங்களை பற்றி அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள், சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் கூட்டு பலாத்காரம், தவறாக அடைத்து வைத்தல் மற்றும் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.






