டெல்லியில் தண்ணீர் பஞ்சம்: உபரி நீரை விடுவிக்க இமாச்சல பிரதேசத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இமாச்சல பிரதேசத்தில் இருந்து பெறுகின்ற நீரை டெல்லி அரசு வீணடிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாலும், அரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும் தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தர பிரதேசம், இமாச்சல் மற்றும் அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு மனு செய்தது. அந்த மனு இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெல்லிக்கு உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல பிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், சுமார் 137 கன அடி நீரை கூடுதலாக இமாச்சல அரசு விடுவிக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு இதுகுறித்த தகவலை அரியானா மாநில அரசிடம் இமாச்சல அரசு தெரிவிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள அரியானா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்படி பெறுகின்ற நீரை டெல்லி அரசு வீணடிக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.