டெல்லியில் துக்ளக் ரோட்டின் பெயர் மாறுகிறதா?... பா.ஜ.க. தலைவர்களின் செயலால் பரபரப்பு

நன்கு அறியப்பட்ட துக்ளக் ரோடு பகுதி, சுவாமி விவேகானந்தா மார்க் என்று பெயர் மாற்றும் செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் முகலாய கால பெயர்களைக் கொண்ட சாலைகளுக்கு மறுபெயரிட வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த கடந்த 2014-க்கு பிறகு சில ரோடுகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. 2015-ம் ஆண்டு அவுரங்கசீப் ரோட்டின் பெயர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ரோடு என மாற்றப்பட்டது.
பின்னர் ஓராண்டு கழித்து, பிரதமர் இல்லம் இருக்கும் 'ரேஸ்கோர்ஸ் ரோடு' லோக் கல்யாண் மார்க் என மாறியது. கடந்த 2023-ம் ஆண்டு புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது ராஜபாதையின் பெயர், கடமைப்பாதை என மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் தோட்டத்தின் பெயரையும் மாற்றினர்.
முகலாய தோட்டம் என அழைக்கப்பட்ட அது, அம்ரித் உதயன் என மாற்றப்பட்டது. இந்தியாவை ஆங்கிலேயர்களும், அவர்களுக்கு முன்பாக முகலாயர்களும் ஆண்டனர். அவர்களின் கீழ் இருந்த அடிமைத்தன மனநிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பெயர் மாற்றத்தை பா.ஜனதாவினர் முன்மொழிகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியின் துக்ளக் ரோட்டின் பெயரும் விரைவில் மாற்றப்படுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அந்த ரோட்டை ஒட்டியுள்ள 'துக்ளக் லேன்' தெருவில் குடியிருக்கும் மத்திய கூட்டுறவுத்துறை இணை மந்திரி கிருஷ்ணபால் குர்ஜார் மற்றும் உத்தரபிரதேச மாநில எம்.பி. தினேஷ் சர்மா ஆகிய இருவரும் தங்களது வீட்டின் பெயர்ப்பலகையில் 'விவேகானந்தர் மார்க்' என எழுதி உள்ளனர். இதுபற்றி கேட்டதற்கு 'கூகுள் மேப்'பில் அப்படித்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.






