துபாய் கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதா? மத்திய அரசு விளக்கம்

தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிந்ததாக பரவும் தகவல் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
துபாய் கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதா? மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துபாய் விமான கண்காட்சி அந்நாட்டில் கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானம், வானை தொட்டு சாகசங்கள் செய்து அசத்தியது. இது விமான கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் மத்திய அரசு மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிந்ததாக பரவும் தகவல் தவறானது. விமானத்தின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பறக்கும்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அமைப்பு ஆகியவற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் வழக்கமான நடைமுறைதான். துபாயில் நிலவுவது போன்று சூழல்களில் இயக்கப்படும் விமானங்களுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறை இது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குளிர்விக்கும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

விமானியின் கேபினில் நிரம்பியிருக்கும் காற்று விமானி மற்றும் சிப்பந்திகள் சுவாசிப்பதாலும், அவர்களது உடலில் இருந்து வெளியாகும் வியர்வையினாலும் சூடாக இருக்கும். இதேபோல விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது அதில் உள்ள ரேடார்கள் உள்ளிட்ட அமைப்புகளும் வெப்பத்தை உமிழ்கின்றன. இதனை கட்டுப்படுத்தி விமானத்தின் உள்ளே குளிர்விக்கும் பணியையும், ஆக்சிஜன் உற்பத்தி செய்வதையும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அமைப்பும் மேற்கொள்கின்றன.

வீடு, அலுவலகங்களில் பொருத்தப்படும் ஏ.சி. எப்படி அறையை குளிர்விக்க தண்ணீரை வெளியேற்றுகிறதோ, அதேபோலத்தான் தேஜஸ் விமானத்தில் பொருத்திய அமைப்பும் தண்ணீரை வௌயேற்றுகிறது. அதனை தவறுதலாக எண்ணெய் கசிவு என்று பரப்பி வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com