அமைச்சர் பதவி வேண்டுமா?... ஜாமீன் வேண்டுமா? - செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


அமைச்சர் பதவி வேண்டுமா?... ஜாமீன் வேண்டுமா? - செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 23 April 2025 4:19 PM IST (Updated: 23 April 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்றுசுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதான லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க முற்படுகிறார் என்று அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், சாட்சிகளை கலைப்பார் என அச்சம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். இதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பின்னர் நீதிபதிகள், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை. மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறிய காரணத்தால் ஜாமின் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய இரு நாள்களுக்குள் அமைச்சராகி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அமைச்சராக இல்லை என்பதாலே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவதை பரிசீலித்தோம். அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஜாமின் கோரினால் நீதிமன்றங்கள் என்ன முடிவு எடுக்கும்? என கேள்வி எழுப்பினர்.

இறுதியில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை வரும் திங்கட்கிழமை (28-ம் தேதி) தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

1 More update

Next Story