‘உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது’ - ராஜ்நாத் சிங்


‘உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது’ - ராஜ்நாத் சிங்
x

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்று வரை மறக்கவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

“கடந்த சில ஆண்டுகளாக நமது தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்புத்துறை இன்று முன்னெப்போதும் இல்லாத உயரங்களைத் தொட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, இப்போது ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் தனியார் துறையின் பங்களிப்பு சுமார் ரூ.33,000 கோடி வரை இருந்துள்ளது.

முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெளிப்படுத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பாகிஸ்தானையே உலுக்கியது. இன்றும் கூட அந்த வலியை பாகிஸ்தான் மறக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் போர்கள் எல்லைகளில் மட்டும் நடைபெறுவது இல்லை. போர் என்பது தற்சமயம் சமச்சீரற்ற வடிவத்தை எடுத்துள்ளதால், பாரம்பரிய பாதுகாப்புக் கண்ணோட்டம் என்பது போதுமானதாக இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், எதிர்கால சவால்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கக் கூடிய ஆயுதப் படைகளை உருவாக்க, பல துணிச்சலான மற்றும் தீர்க்கமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பையும், மூலோபாய சுயாட்சியையும் உறுதி செய்யும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளில் ஒன்று, பாதுகாப்புப் படைத் தலைவர் பதவியை உருவாக்கியதாகும்.

பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பொது-தனியார் கூட்டமைப்புகளை நாங்கள் ஊக்குவித்துள்ளோம். பாதுகாப்பு தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், கல்வியாளர்களுடனான தொழில்துறை கூட்டாண்மைகளையும் அதிகரித்துள்ளோம். இன்று, பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி மையமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.”

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 More update

Next Story