சாலையில் மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற டிரைவர் - பெங்களூருவில் பரபரப்பு


சாலையில் மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற டிரைவர் - பெங்களூருவில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sept 2025 8:44 PM IST (Updated: 25 Sept 2025 4:53 PM IST)
t-max-icont-min-icon

டிரைவர் லோஹித்சவா தனது மகள் கண் முன்னே, சுமார் 11 முறை ரேகாவை கத்தியால் குத்தியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித்சவா. இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ரேகா தாவனகெரே பகுதியில் உள்ள ஒரு கால் சென்ட்டரில் வேலை பார்த்து வந்தார். அவரது சிபாரிசின் பேரில் அதே அலுவலகத்தில் லோஹித்சவாவிற்கு கார் டிரைவர் வேலை கிடைத்தது.

இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ரேகா தனது மூத்த மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது கணவர் லோஹித்சவா, ரேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென ஆத்திரமடைந்த லோஹித்சவா, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரேகா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். தனது மகள் கண் முன்னே, சுமார் 11 முறை ரேகாவை அவர் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து லோஹித்சவா தப்பியோடினார். படுகாயமடைந்த ரேகாவை அங்கிருந்த மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரேகா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான லோஹித்சவாவை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த ரேகாவின் மகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெருங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story