கொல்கத்தாவை உலுக்கிய பெண் டாக்டர் பலாத்கார, கொலை சம்பவம்... குற்றவாளி சஞ்சய் ராயின் மருமகள் மர்ம மரணம்


கொல்கத்தாவை உலுக்கிய பெண் டாக்டர் பலாத்கார, கொலை சம்பவம்... குற்றவாளி சஞ்சய் ராயின் மருமகள் மர்ம மரணம்
x

சிறுமியின் மரணத்திற்கான காரணம் பற்றிய தடய அறிவியல் அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம் என போலீசார் கூறினர்.

கொல்கத்தா,

கொல்கத்தாவின் பவானிப்பூர் பகுதியில் வசித்து வருபவர் போலா சிங். இவருடைய மனைவி பூஜா ராய். இந்நிலையில், இவர்களுடைய வீட்டின் அலமாரியில் தூக்கில் தொங்கிய நிலையில் 11 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

அது போலா சிங்கின் மகள் சுரஞ்சனா சிங். கடந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டார்.

கொல்கத்தாவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் குற்றவாளியான சஞ்சய் ராய் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சுரஞ்சனா சிங், ராயின் மருமகள் ஆவார்.

போலா சிங் முதலில் பபிதாவை திருமணம் செய்துள்ளார். அவர் சஞ்சய் ராயின் மூத்த சகோதரி ஆவார். போலா-பபிதாவின் ஒரே மகள் சுரஞ்சனா சிங். பபிதா சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்த நிலையில், அவருடைய இளைய சகோதரி பூஜாவை போலா திருமணம் செய்து கொண்டார்.

சுரஞ்சனா சிங்கின் வளர்ப்பு தாயான பூஜா மற்றும் தந்தை போலா இருவரும் சிறுமியை கடுமையாக தாக்கி வந்துள்ளனர். 2 பேரும், சிறுமியை மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தி உள்ளனர். இரவு 2 மணிக்கு கூட இந்த துன்புறுத்தல் நடக்கும். அப்போது, வீட்டில் இருந்து சிறுமியை தூக்கி வெளியே வீசி விடுவார்கள்.

இதனால், மனதளவில் சிறுமி ஆழ்ந்த வருத்தமடைந்து இருக்கிறாள் என பக்கத்து வீட்டுக்காரர்கள் குற்றச்சாட்டாக கூறினர். சிறுமியின் பாட்டி கூறும்போது, சுரஞ்சனாவை 2 பேரும் பெல்ட் கொண்டு அடித்தும், சுவரில் தலையை மோத செய்தும் தாக்குவார்கள் என்றார்.

இந்நிலையில், பூஜா மற்றும் போலா நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கழுத்தில் துணியால் சுற்றப்பட்டு, உடைகள் வைக்கும் அலமாரியில் தூக்கில் தொங்கியபடி சிறுமி காணப்பட்டாள்.

போலீசார் கூறும்போது, முதல்கட்ட விசாரணையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டாள் என தெரிய வந்துள்ளது. ஆனால், கொலைக்கான சாத்தியமும் மறுப்பதற்கு இல்லை என தெரிவித்தனர். சிறுமியின் மரணத்திற்கான காரணம் பற்றிய தடய அறிவியல் அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம் என போலீசார் கூறினர்.

சிறுமியின் மரண சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவத்திற்கு பின்னர், 2 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் தடுத்து நிறுத்தி, செருப்புகளால் அடித்து, கடுமையாக தாக்கினர்.

1 More update

Next Story