இந்தியா வந்த மேலும் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் - விரைவில் ராணுவத்தில் இணைப்பு...!

3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் ஹிண்டன் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டன.
லக்னோ,
இந்திய ராணுவ விமானப்படைப்பிரிவிற்கு 600 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 6 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவில் இருந்து வாங்க கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தப்படி 2 தவணைகளாக ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதன்படி, முதல் தவணையாக 3 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 2024 ஜூலை மாதம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தாமதம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தவணையாக 3 அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், 2வது தவணையாக எஞ்சிய 3 அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து சரக்கு விமானம் மூலம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் உத்தரபிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இந்த ஹெலிகாப்டர்கள் சோதனைக்குப்பின் பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தானின் ஜோத்பூர் படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் ராணுவத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்ட 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் ஜோத்பூர் படைத்தளத்தில் ராணுவ இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






