நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பூட்டான் பயணம் ரத்து

பூட்டானில் உள்ள பாரோ விமான நிலைய பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பூட்டான் செல்ல இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுடன் இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும், நிர்மலா சீதாராமனுடன் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை குழு அதிகாரிகள் உடன் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பூட்டானில் நிர்மலா சீதாராமன் செல்ல இருந்த பாரோ விமான நிலைய பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதால், மத்திய நிதி மந்திரியின் பூட்டான் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்மலா சீதாராமன் தனது பூட்டான் சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் 1765-ம் ஆண்டு நிறுவப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சாங்சென் சோகோர் மடாலயத்திற்கு செல்ல இருந்தார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தின்போது நிர்மலா சீதாராமன் பூட்டான் மன்னர் மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






