தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்துகள்; உதவி மையத்திற்கு 170-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக தகவல்

தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலேயே புத்தாடைகளை அணிந்து, இனிப்பு, பலகார வகைகளை அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து, கோவில்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.
இதனிடையே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தினர். பட்டாசுகளை வெடிக்கும்போது தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், அருகில் மணல் அல்லது தண்ணீர் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இருப்பினும் பல்வேறு இடங்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறின. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் நேற்று இரவு 11.30 வரை, தீ விபத்து சம்பவங்கள் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு சுமார் 170-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.






