இலங்கை விமானத்தில் பஹல்காம் பயங்கரவாதிகள் சென்றார்களா? பாதுகாப்பு படையினர் சோதனை

சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலையடுத்து தீவிர சோதனை நடைபெற்றுள்ளது.
கொழும்பு,
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் கடந்த ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் தெற்கு காஷ்மீரில் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதற்கிடையே, சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில், பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் சென்றதாக தகவல் வெளியானதன் அடிபப்டையில், தீவிர சோதனையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்ததும், அங்கு தயராக இருந்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். சென்னை விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.






