சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் மாயம்


சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் மாயம்
x

ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது.இந்த விவகாரம் தற்போது வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது தங்க ஆபரணங்கள் தனியாகவும், வெள்ளி ஆபரணங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவேட்டில் 3,247.900 கிராம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுன்)மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் தங்கத்தை அபகரித்தது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், வைக்கம் மகாதேவர் கோவிலில் மாயமான 31½ பவுன் தங்கம் குறித்தும், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

1 More update

Next Story