கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடல் இன்று தகனம்

அச்சுதானந்தன் ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தவர் வி.எஸ்.அச்சுதானந்தன். முதல்-மந்திரியான போது அவருக்கு வயது 85. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலை சிறந்த மூத்த தலைவர்களில் ஒருவர். கேரள சட்டசபையில் 1992 முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். ஊழல் குற்றச்சாட்டில் சிக்காதவர் என்பது மட்டுமின்றி, ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு மாதமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 101 வயதான அச்சுதானந்தன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தொடர்ந்து அவரது உடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையகமான ஏ.கே.ஜி. மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தொண்டர்களின் இறுதி அஞ்சலிக்கு பின் இரவு திருவனந்தபுரத்தில் உள்ள அச்சுதானந்தன் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதைதொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கேரள தலைமை செயலக தர்பார் அரங்கில் அச்சுதானந்தனின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அச்சுதானந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பின்னர் மதியம் 2 மணி அளவில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக ஆலப்புழைக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அச்சுதானந்தனின் மனைவி வசுமதி, மகன் அருண் குமார், மகள் வி.வி.ஆஷா ஆகியோர் உடன் இருந்தனர். இன்று (புதன்கிழமை) காலை ஆலப்புழை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக அச்சுதானந்தன் உடல் வைக்கப்படும். தொடர்ந்து பிற்பகலில் அரசு மரியாதையுடன் அவரது உடல் ஆலப்புழை வலிய சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.






