முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு; கார்கே நேரில் அஞ்சலி

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாட்டீலின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புனே,
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (வயது 91) நேற்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவர் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர், மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்ததுடன், இந்திய அரசியலில் பிரபல நபராகவும் இருந்ததுடன், நீண்டகாலம் பொதுமக்களுக்கு சேவையாற்றி உள்ளார். அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதேபோன்று மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், சிவராஜ் பாட்டீல் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர். பொது வாழ்க்கையில் நீண்ட ஆண்டுகள் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய மந்திரி, மராட்டிய சட்டசபை சபாநாயகர் மற்றும் மக்களவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சமூக நலனுக்காக பங்காற்றியதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.
பல ஆண்டுகளாக அவருடன் பலமுறை உரையாடி உள்ளேன். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அவர் என் இல்லத்திற்கு வந்தபோது அவருடன் பேசியிருக்கிறேன். இந்த சோக தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என பதிவிட்டு உள்ளார்.
7-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தொடர்ந்து 2004-ம் ஆண்டு வரை எம்.பி.யாக பதவி வகித்திருக்கிறார். 10-வது மக்களவையின் சபாநாயகர் மற்றும் பொது வாழ்க்கையில் 40 ஆண்டுகளாக பாடுபட்டவர். தேசிய அரசியலுக்கு வருவதற்கு முன்பு, மராட்டிய சட்டசபையில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மராட்டியத்தில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். பஞ்சாப் கவர்னராகவும் அவர் இருந்திருக்கிறார்.
அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.






