கூட்டு பாலியல் பலாத்காரம்; 2 குழந்தைகளின் தாய் கொடூர கொலை

இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் கண்டுவா பகுதியில் உள்ள ரோஷ்னி சவுகி பகுதியில், பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று காலை வீட்டை விட்டுச் சென்ற பெண் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குழந்தைகள் அவரை தேடி அலைந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹரி பல்வி என்பவரது வீட்டில் மயங்கிய நிலையில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஹரி பல்வி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை வந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சட்டத்தின் மீதான பயம் இல்லாத போதுதான் இது போன்ற கொடூரமான குற்றங்கள் நடைபெறும். பெண்கள் மீது இத்தகைய வன்முறைகள் நிகழ்த்தப்படும்போதும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.






