உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தி சிப் - பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று முதல் 4-ம் தேதி வரை செமிகான் இந்தியா 2025 மாநாடு நடைபெறுகிறது. இந்தநிலையில், 'செமிகான் இந்தியா 2025' மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படை முக்கியமான கனிமங்கள் ஆகும். நாடு முக்கியமான கனிமங்கள் மிஷனில் பணியாற்றத் தொடங்கியுள்ளது. அரிய பூமி கனிமங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்திய செமிகன் மிஷனின் அடுத்த கட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். புதிய DLI(வடிவமைப்பு-இணைக்கப்பட்ட ஊக்கத்) திட்டத்திற்கு அரசாங்கம் வடிவம் கொடுக்கப் போகிறது.
சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என உலகம் முழுவதும் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் சிங்கப்பூர், தென்கொரியா, மலேஷியா ஆகிய ஆறு நாடுகளுடன் வட்டமேசை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், 350 கண்காட்சியாளர்கள் இம்மாநாட்டில் அரங்குகளை வைக்கவுள்ளனர். 1,100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எம்., மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.






