வேலை தேடி சென்ற பட்டதாரி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை


வேலை தேடி சென்ற பட்டதாரி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
x

பட்டதாரி இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் மஞ்சேனஹள்ளியை சேர்ந்தவர் இளம்பெண். இவர் பி.காம் பட்டதாரி ஆவார். இவர் வேலை தேடி சிக்பள்ளாப்பூர் டவுனுக்கு வந்துள்ளார். வேலை கிடைக்காத நிலையில் அவர் தனது சொந்த ஊருக்கு நடந்தே சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார்.

அவர் இளம்பெண்ணை பார்த்ததும் தனது ஸ்கூட்டரை நிறுத்தி, எங்கே செல்கிறீர்கள் என கேட்டதுடன், நானே உங்களை மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண்ணும் அவருடன் ஸ்கூட்டரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால் கவுரிபித்தனூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் இளம்பெண் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது இளம்பெண்ணின் உடையை கிழித்து அந்த நபர் எறிந்துள்ளார். பின்னர் இளம்பெண்ணை அவர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்பிறகு புதிய ஆடை வாங்கி வருவதாக கூறி இளம்பெண்ணின் கம்மல்களை பறித்துக் கொண்டு அந்த நபர் ஸ்கூட்டரில் அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் சிக்பள்ளாப்பூருக்கு சென்ற அவர், தனது நண்பரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, மீண்டும் ஸ்கூட்டரில் வைத்து அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விட்டு விட்டு 2 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

ஆனால் நடக்க முடியாமல் இளம்பெண் மயக்க நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இருப்பதை பார்த்த ஷில்பா கவுடா என்ற பெண், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் ஸ்கூட்டரில் லிப்ட் கொடுப்பதாக கூறி ஸ்கூட்டரில் வந்த நபரும், அவரது நண்பரும் சேர்ந்து அவரை கூட்டு வன்கொடுமை செய்த விவகாரம் வெளியே ெதரியவந்தது.

இதையடுத்து ஷில்பா கவுடா, அந்த இளம்பெண்ணை சிக்பள்ளாப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும் அவர் இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மகளிர் போலீசிலும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

2 பேர் அதிரடி கைது

அதில், இளம்பெண்ணை லிப்ட் கொடுப்பதாக ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதில், ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு அவரது நண்பரையும் போலீசார் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைதானவர்கள் சிக்பள்ளாப்பூர் டவுனை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, அவரது நண்பர் ஜனார்த்தனாச்சாரி ஆகியோர் என்பதும், மெக்கானிக்கான சிக்கந்தர் பாஷா தான் ஸ்கூட்டரில் லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று இளம்பெண்ணை முதலில் வன்கொடுமை செய்தும், பின்னர் அவரே தனது நண்பரான ஜனார்த்தனாச்சாரியை அழைத்து வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வேலை தேடி வந்த பி.காம் பட்டதாரி பெண்ணை லிப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story