ஜார்க்கண்டில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 162 பேர் மீட்பு

Image Courtesy : PTI
கிராம மக்களின் உதவியுடன் படகுகள் மூலம் அனைத்து மாணவர்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்கம் மாவட்டத்தில் இயங்கி வரும் உண்டு உறைவிடப் பள்ளியை சுற்றி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்களை அங்கிருந்த ஆசிரியர்கள் பள்ளியின் மேல்மாடிக்கு அழைத்துச் சென்றனர். அந்த பள்ளியில் படித்து வரும் 162 மாணவர்கள், நேற்று இரவு முதல் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக தகவலறிந்த் இன்று அதிகாலை 5.30 மணியளவில் காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளியில் சிக்கியிருந்த 162 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் வந்து சேர்வதற்குள் கிராம மக்களின் உதவியுடன் படகுகள் மூலம் அனைத்து மாணவர்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






