குட்கா வாங்க பணம் தராத கணவர்; 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை

வீடு திரும்பியபோது தனது மனைவியும், குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தததைப் பார்த்து பாபு யாதவ் அதிர்ச்சியடைந்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் பாபு யாதவ். இவரது மனைவி ஜோதி யாதவ்(வயது 26). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.
இதனிடையே, ஜோதி யாதவ், குட்கா பயன்படுத்தி வந்ததாகவும், நாளடைவில் அதற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. மேலும் குட்கா வாங்குவதற்காக ஜோதி தனது கணவரிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை பாபு யாதவ் வேலைக்கு புறப்பட்டு செல்லும்போது, அவரிடம் குட்கா வாங்குவதற்காக ஜோதி யாதவ் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த பாபு யாதவ், மனைவியை கடுமையாக திட்டிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மாலையில் பாபு யாதவ் வீடு திரும்பியபோது, அவரது 4 வயது மகன் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். அந்த சிறுவனிடம், ‘ஏன் அழுகிறாய்?’ என்று அவர் கேட்டபோது, தனது தாய் தனக்கு கசப்பாக எதோ ஒன்றை குடிக்க கொடுத்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளான். மறபுறம் தனது மனைவியும், மற்ற 2 குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தததைப் பார்த்து பாபு யாதவ் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பாபு யாதவின் 2 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜோதியும், 4 வயது மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பாபு யாதவின் 5 வயது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குட்கா வாங்க கணவர் பணம் தராததால், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






