டிரம்மில் கணவன் உடல்... மனைவி, குழந்தைகள் மாயம் - போலீசார் விசாரணை

உயிரிழந்தவரின் மனைவி, மூன்று குழந்தைகள் காணாமல் போன நிலையில், வீட்டு உரிமையாளரின் மகனும் மாயமாகியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹான்ஸ்ராம். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், ஹான்ஸ்ராமின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் மேல்பகுதியில் இருந்த டிரம்முக்குள் ஹான்ஸ்ராமின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஹான்ஸ்ராமின் கழுத்து பகுதி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருந்தது. உடல் சிதைவதை தடுப்பதற்காக டிரம்ப் முழுவதும் உப்பு போடப்பட்டு இருந்தது. ஹான்ஸ்ராமின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஹான்ஸ்ராமின் மனைவி, மூன்று குழந்தைகள் காணாமல் போன நிலையில், வீட்டு உரிமையாளரின் மகனும் மாயமாகியுள்ளது போலீசாருக்கு அவர்களின் மேல் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. மாயமானவர்களை கண்டுபிடித்தாலே இந்த சம்பவத்துக்கான காரணம் தெரிய வரும் என்ற நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.






