டிரம்ப், புதின் அலாஸ்காவில் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரவேற்பு

டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு வருகிற 15-ந்தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் இடையேயான போா் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவ்விவகாரத்தில் சமீபத்தில் ரஷியாவுடன் அமெரிக்காவுக்கு மோதல் போக்கு அதிகரித்தது. அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர ரஷியாவுக்கு டிரம்ப் நேற்று வரை கெடு விதித்திருந்த நிலையில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷியாவுக்கு சென்று அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே டிரம்ப்- புதின் அடுத்த வாரம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு வருகிற 15-ந்தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:- எனக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வருகிற 15-ந்தேதி அலாஸ்காவில் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப்-புதின் சந்திப்பை ரஷியாவும் உறுதிப்படுத்தியது. கடந்த மாதம் துருக்கியில் ரஷியா-உக்ரைன் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் டிரம்ப்புதின் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து உள்ளது. இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டிரம்ப், புதின் சந்திப்பு நடைபெற உள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த சந்திப்பு உக்ரைனில் அமைதியை கொண்டு வர உதவி புரியும், இது போருக்கான காலம் அல்ல எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.






