’இந்தியாவின் எதிர்காலம்’: ராகுல், மு.க. ஸ்டாலின் போட்டோவை பகிர்ந்து கனிமொழி பதிவு


’இந்தியாவின் எதிர்காலம்’: ராகுல், மு.க. ஸ்டாலின் போட்டோவை பகிர்ந்து கனிமொழி பதிவு
x

ராகுல் காந்தியின் 'வாக்காளர் உரிமை'யாத்திரையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது” என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பீகாரில் ராகுல் காந்தி கடந்த 17ஆம் தேதி முதல் 15 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை மொத்தம் 16 நாட்கள் நடைபெற்று, பாட்னாவில் வரும் 1ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையை 1,300 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பீகாரில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்காளர் உரிமை'யாத்திரையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பேரணியில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், வாக்குரிமையை காக்கும் போராட்டத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி, மு.க ஸ்டாலின் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்தியாவின் எதிர்காலம் என பதிவிட்டு இருக்கிறார்.

1 More update

Next Story