இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்துகள் பதிவிட்ட விவகாரம்: நடிகர் தர்ஷன் மனைவிக்கு போலீஸ் நோட்டீஸ்

இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்துகள் பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் தர்ஷன் மனைவிக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு எதிராக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகளை சிலர் பதிவிட்டு இருந்தனர். இதுபற்றி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில், 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் தயாராகி வருகின்றனர். கைதான 8 பேரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஆபாச கருத்துகள் பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் தர்ஷன் மனைவிக்கு சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். அதில், வருகிற 23-ந் தேதி (அதாவது நாளை) பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வழக்கு தொடர்பாகவும், ஆபாச பதிவுகள் வெளியிட்ட விவகாரம் பற்றியும் வாக்குமூலம் அளிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலில் கைதான 8 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு, அதன்பிறகும் விசாரணையை தொடர்ந்து நடத்தி கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.






