வீடு புகுந்து வாலிபர் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் அளித்த ஐ.டி. பெண் ஊழியர்

பெண்ணின் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டிற்கு வாலிபர் சென்றதும் தெரியவந்தது.
புனே கோந்த்வா பகுதியை சேர்ந்த 22 வயது ஐ.டி. பெண் ஊழியர் கடந்த 3-ந்தேதி பரபரப்பு புகார் ஒன்றை போலீஸ் நிலையத்தில் அளித்தார். அதில், சம்பவத்தன்று இரவு கூரியர் டெலிவரி செய்வது போல வந்த நபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, முகத்தில் மயக்க மருந்து தெளித்து தன்னை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியதாக கூறி இருந்தார். மேலும் எனது செல்போனை பயன்படுத்தி எனது முதுகு பகுதி, அந்த நபரின் முகத்தின் ஒரு பகுதி தெரியும் வகையில் செல்பி எடுத்துள்ளார். சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என அதில் மிரட்டல் பதிவிட்டு இருந்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின்பேரில் 25 வயது வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் பெண் கூறிய அத்தனை புகார்களும் பொய் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வாலிபர் பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர் என்பதும், பெண்ணின் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது. மேலும் செல்பியும் இருவர் சம்மதத்துடன் எடுக்கப்பட்டதுதான், இதை அந்தப்பெண் மாற்றியமைத்து ஏமாற்றியுள்ளார் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் போலீசாருக்கு பொய் புகார் அளித்து வாலிபரை வழக்கில் சிக்கவைத்த பெண் ஐ.டி. ஊழியர் மீது, பொய்யான புகார் வழங்கியது, ஆதாரங்களை ஜோடித்தது போன்ற கைது நடவடிக்கை அல்லாத குற்றப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






