கர்நாடகா: மணிக்கு 300 கி.மீ. வேகம்; பைக் மோதலில் 2 பேர் பலி - வைரலான வீடியோ

பெட்ரோல் டேங்கில் இருந்து எரிபொருள் கசிந்து தீப்பிடித்து எரிந்து இருக்க கூடும் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
மைசூரு,
கர்நாடகாவின் மைசூரு நகரில் ஹயாபூசா ரக பைக் ஒன்றில் சாமராஜநகர் பகுதியை சேர்ந்த சையது சரூன் என்பவர் சென்றுள்ளார். அந்த பைக் மணிக்கு 300 முதல் 312 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது. இந்நிலையில், திடீரென சரூனின் பைக், சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பைக் மீது மோதி விட்டு சென்றது.
அந்த பைக்கில், தனியார் நிறுவன உணவு டெலிவரி செய்யும் கார்த்திக் என்பவர் இருந்துள்ளார். மோதிய வேகத்தில் சரூனின் பைக் நிற்காமல் சென்றுள்ளது. அந்த பைக்கை சிறிது தூரம் இழுத்து சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே கார்த்திக் பலியானார். இந்த நிலையில், சரூனின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பைக் திடீரென வெடித்து சிதறியது. அதன் பெட்ரோல் டேங்கில் இருந்து எரிபொருள் கசிந்து தீப்பிடித்து எரிந்து இருக்க கூடும் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சரூன் சாலையில் கிடந்துள்ளார். அவர் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், தீக்காயங்களால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். பைக் விபத்தில் சிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சம்பவம் பற்றி என்.ஆர். போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.






