காஷ்மீர்: வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம்

மீட்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழை காரணமாக ரஜோரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆற்றை கடக்க முயன்ற ஒரு சிறுவன், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டான். பின்னர் ஒரு பாறையை பிடித்துக் கொண்டு அச்சிறுவன் உயிர் தப்பினான்.
ஆற்றில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் சிறுவனை காப்பாற்ற அப்பகுதி மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதற்கிடையில் இது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு மாநில மீட்புப் படையினர், போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டரை கொண்டு வந்து, ஆற்றின் நடுவே சிக்கிய சிறுவனை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. சிறுவனின் உயிரை காப்பாற்ற இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட துரிதமான முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






