கேரள சட்டசபையில் 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டம்

கவசங்கள் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கவசத்தின் எடை குறைவாக இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரளா ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சினை நேற்று கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேவசம் போர்டு மந்திரி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று 2-வது நாளாக சட்டசபை கூடியது. தொடர்ந்து இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அவர்கள் ,அவையின் நடுவில் பதாகைகளுடன் நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தேவசம்போர்டு மந்திரி பதவி விலக வேண்டும். தேவசம்போர்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.






