பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

கேரளாவில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
திருவனந்தபுரம்,
தமிழகத்தை போல கேரள மாநிலத்திலும் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என என கேரள அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், ”அரசின் எந்தவித நலத்திட்ட நிதி உதவியும் பெறாத 35 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் பெண்களுக்கு ‘மகளிர் பாதுகாப்பு திட்டத்தில்’ மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்படும். சமூக பாதுகாப்பு பென்சன் மாதம் 1,600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நெல் கொள்முதல் விலையாக கிலோவுக்கு 28.20 வழங்கப்படுகிறது. அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்த நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து கேரள மக்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும், அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






