கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் நேற்று இரவு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
அதில், பிஜு மற்றும அவரது மனைவி சந்தியாவும் அடக்கம். அதேவேளை, பாதுகாப்பான பகுதிக்கு சென்றபின்னர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுக்க வேண்டும் என பிஜுவும் அவரது மனைவியும் இரவு 11 மணிக்குமேல் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டிற்குள் இருந்த பிஜுவும் அவரது மனைவி சந்தியாவும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பல மணிநேரம் போராடி சந்தியாவை காயங்களுடன் மீட்டனர். ஆனால், நிலச்சரிவால் வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பிஜு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






