கேரளா உள்ளாட்சித் தேர்தல்: முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்


கேரளா உள்ளாட்சித் தேர்தல்: முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்
x
தினத்தந்தி 11 Dec 2025 9:44 AM IST (Updated: 11 Dec 2025 1:25 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சித் தேர்தலுக்காக மொத்தம் 18,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் 69.70 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) 2-ம் கட்ட வாக்குப்பதிவு திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார். இந்த தேர்தலில் மொத்தம் 38,994 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 18,974 ஆண்கள், 20,020 பெண்கள். கிராம ஊராட்சிகளில் 28,274 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 3,742 வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சிகளில் 681 வேட்பாளர்களும், நகராட்சிகளில் 5,546 வேட்பாளர்களும், மாநகராட்சிகளில் 751 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்காக 7 மாவட்டங்களில் மொத்தம் 18,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 2,055 வாக்குச்சாவடிகள் பதற்றம் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 72 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

1 More update

Next Story