கேரள உள்ளாட்சி தேர்தல்: பாஜகவிற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வாழ்த்து

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அதேபோல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அக்கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது: கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. மக்களின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. கேரளாவின் ஜனநாயக உணர்வு வெளிப்பட்டுள்ளது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாகும். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் தக்கம் பாடம் புகட்டியுள்ளனர். இது 2020 தேர்தலை விட மிகச் சிறப்பான முடிவாகும்.
அதேபோல, திருவனந்தபுரத்தில் பா.ஜனதா அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனையாகும். இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.






