அயோத்தி கோவிலில் 500 ஆண்டுகளுக்கு பின்பு கடவுள் ராமர் தீபாவளி கொண்டாட உள்ளார்: பிரதமர் மோடி


அயோத்தி கோவிலில் 500 ஆண்டுகளுக்கு பின்பு கடவுள் ராமர் தீபாவளி கொண்டாட உள்ளார்: பிரதமர் மோடி
x

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் ஒப்பிடும்போது, காதி பொருட்களின் விற்பனை 400 சதவீதம் அதிகரித்து உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று பேசும்போது, இந்த ஆண்டிற்கான தீபாவளி சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டார். புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி வழியே அவர் இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, குடிமக்கள் அனைவருக்கும் தந்தேராஸ் கொண்டாட்டங்களுக்கான என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இன்னும் 2 நாட்களில், நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டு தீபாவளி குறிப்பிடத்தக்க வகையில், சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்கு பின்னர், கடவுள் ராமர் அயோத்தியில் அவருடைய பிரமாண்ட கோவிலில் நிறுவப்பட்டிருக்கிறார்.

இந்த பிரமிக்கத்தக்க கோவிலில் அவருடன் தீபாவளியை கொண்டாடுவது என்பது இதுவே முதன்முறையாகும். இதுபோன்ற ஒரு சிறந்த மற்றும் பிரமாண்ட தீபாவளியை காண்பதில் நாம் அனைவரும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் என பேசியுள்ளார்.

இந்த நன்னாளில், ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்காக அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். நாட்டில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்கும் நடைமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் ஒப்பிடும்போது, காதி பொருட்களின் விற்பனை 400 சதவீதம் அதிகரித்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். உலகம் பின்பற்றுவதற்கு ஏற்ற ஓர் எடுத்துக்காட்டை, நம்முடைய நாட்டில் அரசு ஊழியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்களின் பொருளாதார சுதந்திரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் கிராமப்புற இந்தியாவில் தொழில்முனைவோர்களாக அவர்கள் உருவாக வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் அவர் பேசியுள்ளார்.

1 More update

Next Story