காதலுக்கு வயதில்லை; படுக்கையில் இருந்த 65 வயது தொழிலாளியை தேடி வந்து கரம் பிடித்த 55 வயது பெண்

திருமணத்தில் முன்னாள் எம்.பி. ஏ.எம். ஆரிப் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பகுதியை சேர்ந்தவர் ரமேசன் (வயது 65). தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திருமணமான இவர் தனியாக வசித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஓமனாவும் (55) மணவாழ்க்கை முறிந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் ரமேசனுக்கும், ஓமனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த நிலையில் முதுமை வயதில் அவர்களுக்கிடையே திடீரென காதல் மலர்ந்தது. தனிமையாக வசிக்கும் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணையலாமே? என்ற துணிச்சலான முடிவை எடுக்க, அந்த ஆசையை உறவினர்களிடமும் தெரிவித்தனர். உறவினர்களும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், வயதான காலத்தில் வாழ்க்கை இனிமையாக இருக்கட்டுமே என சம்மதம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஊரறிய திருமணத்தை நடத்த மணமக்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் ரமேசன் எதிர்பாராதவிதமாக கடந்த 15-ந்தேதி சைக்கிளில் சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருமண ஏற்பாடு நடந்த நிலையில் ரமேசன் விபத்தில் சிக்கியதால், ஓமனாவுடன் நடக்க இருந்த திருமணத்தை தள்ளி வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டதால் ரமேசன் மற்றும் ஓமனா ஆகிய இருவரும் நிச்சயித்த நாளிலேயே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.
ஆனால் ரமேசன் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்த நிலையில், அது எப்படி சாத்தியம்? என்று உறவினர்களுக்குள் கேள்வி எழுந்தது. எனினும் மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தனர். அதன்படி ரமேசன் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கட்டிலில் அமர வைக்கப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு மணப்பெண்ணான ஓமனா மணக்கோலத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வந்துள்ளார்.
அங்கு உறவினர்கள் முன்னிலையில் ரமேசன், ஓமனாவின் கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். வயதான காலத்தில் காதலித்து கரம் பிடித்த இருவரையும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மலர் தூவி வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு படுக்கையில் இருந்த நிலையில் சிகிச்சை பெறும் கணவர் ரமேசனை, ஓமனா கவனிக்க தொடங்கினார்.
இந்த திருமணத்தில் முன்னாள் எம்.பி. ஏ.எம். ஆரிப் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவர்கள் இருவருக்கும் இது 2-வது திருமணம் என்றபோதும், காயமடைந்த கணவனை திருமணம் முடிந்த உடனே மனைவி ஓமனா கவனிக்க தொடங்கியது பலராலும் பாராட்டை பெற்றது. காதலுக்கு வயதில்லை என்று இந்த ஜோடி வாழ்க்கையை தொடங்கியுள்ளது.






