காதலே ஜெயம்... விபத்தில் பலியான ஆண் பாம்பு; சுற்றி சுற்றி வந்து உயிரை விட்ட பெண் பாம்பு

கோப்புப்படம்
ஆண் பாம்பின் அருகேயே ஒரு நாள் முழுவதும் அந்த பெண் பாம்பு இருந்துள்ளது.
மொரீனா,
மத்திய பிரதேசத்தின் மொரீனா நகரில் பகத்கார் கிராமத்தில் துர்குடா காலனி பகுதியருகே, சாலையை கடந்து சென்றபோது ஆண் பாம்பு ஒன்றை அடையாளம் தெரியாத வாகனம் ஏற்றி விட்டு சென்றது. இதில், அந்த பாம்பு நசுங்கி உயிரிழந்தது. கிராமத்தினர் அதனை எடுத்து சாலையோரத்தில் போட்டு விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர், பெண் பாம்பு ஒன்று ஆண் பாம்பை தேடி அந்த பகுதிக்கு வந்து சேர்ந்தது. அது, உயிரற்ற துணையின் உடலை பார்த்து, துயரத்தில் மூழ்கியது. சுற்றி சுற்றி வந்து அதன் அருகிலேயே படுத்து கொண்டது. அந்த பகுதி வழியே சென்றவர்கள் இதனை பார்த்தபடி சென்றனர்.
இந்நிலையில், 24 மணிநேரம் வரை அந்த ஆண் பாம்பின் அருகேயே பெண் பாம்பு இருந்துள்ளது. அசைவற்ற நிலையிலும், சோர்வான நிலையிலும் அது இருந்தது. அந்த பாம்பு, அதனுடைய துணையை வழியனுப்பி வைக்கும் வகையில் உள்ளது என நினைத்து மக்கள் கடந்து போனார்கள்.
ஆனால், அந்த இடத்திலேயே அது உயிரை விட்டிருந்தது. ஆண் பாம்பு உயிரிழந்த அந்த இடத்திலேயே நீண்டநேரம் அசையாமல், ஒரு நாள் முழுவதும் ஆழ்ந்த அமைதியில் இருந்த அந்த பெண் பாம்பு, சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ கூற வந்தது போன்று இருந்தது. பின்பு உலகை விட்டு சென்று விட்டது.
இதனை அறிந்த அந்த பகுதியில் வாழும் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த இரண்டு பாம்புகளுக்கும் இறுதி சடங்குகளை நடத்தி முடித்தனர். இந்து மதத்தில் ஆண் மற்றும் பெண் நாகங்களுக்கு என்று உயர்ந்த மதிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றை கடவுளாக வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது.
இந்நிலையில், ஆண் பாம்பு உயிரிழந்த துயரத்தில், அதன் மீது காதல் கொண்டிருந்த பெண் பாம்பும் உயிரிழந்து விட்டது. அழிவில்லா அவற்றின் அன்பு மற்றும் பாசத்திற்காக அந்த பகுதியில் மேடை ஒன்றை அமைக்க கிராமவாசிகள் முடிவு செய்துள்ளனர். பாம்புகள் இரண்டும் மரணித்து விட்டபோதும் அதன் பாசமும், காதலும் மரணிக்கவில்லை.
காதல் வெற்றி பெற்று விட்டது. அந்த பாம்புகள் இந்த உலகை விட்டு மறைந்தபோதும், வேறு உலகில் ஒன்றாக வாழும் என கிராமத்தினர் சலசலப்புடன் பேசியபடியே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றனர்.






