கர்ப்பிணி மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற காதல் கணவன் - காரணம் என்ன...?


கர்ப்பிணி மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற காதல் கணவன் - காரணம் என்ன...?
x

கர்ப்பிணி மனைவியின் உடல் உறுப்புகளை துண்டு, துண்டாக வெட்டினார்.

நகரி,

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியைச்சேர்ந்தவர் சுவாதி (வயது 25). இவர் மகேந்தர் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சுவாதி கர்ப்பிணி ஆனார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே திடீரென குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த மகேந்தர் ரெட்டி, கர்ப்பிணி என்றும் பாராமல் சுவாதியை வெட்டிக்கொலை செய்தார். பின்னர் அவரது உடல் உறுப்புகளை துண்டு, துண்டாக வெட்டினார். அந்த உறுப்புகளில் ஒரு பகுதியை பிளாஸ்டிக் கவரில் சுற்றி புறநகர் பகுதியில் உள்ள ஆற்றில் வீசினார். இதற்கிடையே உடலை வெட்டும் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டது. உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு அவர் வெட்டிய உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு இருந்தனர். இதனை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மகேந்தர்ரெட்டியை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் வீசிய உடல் பாகங்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மகேந்தர் ரெட்டியும், சுவாதியும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே சுவாதி மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள மகேந்தர் ரெட்டி விரும்பவில்லை என்பதால் ஏற்கனவே ஒருமுறை மனைவியின் கருவை கலைத்துள்ளார். தற்போது மீண்டும் அவர் கர்ப்பிணியானதால் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதவிர மனைவியை கொலை செய்த மகேந்தர்ரெட்டி, தனது மனைவியை காணவில்லை என்று சுவாதியின் தங்கைக்கு தெரிவித்துள்ளார். மேலும் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். கொலையை மறைப்பதற்காக இப்படி நாடகமாட முயற்சித்துள்ளார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story