மகா கும்பமேளா: 50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்


மகா கும்பமேளா: 50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்
x

50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 55 கோடிக்கு அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. வருகிற 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. எனவே இன்னும் பலர் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், 55 கோடி என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், பிரயாகராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியில் ஸ்ரீ ராமரையும், காசியில் பாபா விஸ்வநாத்தையும் நேபாள பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித மண் மற்றும் கங்கை நீரை நேபாள பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். சிலர் அதை நெற்றியில் தடவிக்கொள்கின்றனர். அவ்வாறு எடுத்து செல்லப்படும் புனித மண் மற்றும் கங்கை நீர் பல்வேறு மத விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story