மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு பயந்து வாலிபர் தற்கொலை

மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு பயந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கை குறித்து ஏற்பட்ட அச்சம், மாநிலம் முழுவதும் மக்களிடையே மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் மேலும் 2 பேர் தற்கொலை செய்துகொண்டதால், தற்கொலை எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹௌரா மாவட்டம் உலுபெரியாவில் வசித்த 30 வயது ஜாஹிர் மல் என்பவர், அடையாள ஆவணத்தில் எழுத்துப் பிழை இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அந்தப் பிழையால் தனது குடியுரிமை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயத்தில், கடந்த ஒரு வாரமாக சரிசெய்ய முயன்றும் முடியாமல் போனதால், நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதேபோல், முர்ஷிதாபாத் மாவட்டம் கண்டியில் வாழ்ந்த 45 வயது விவசாயி மஹுல் ஷேக், தனது பெயர் 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இல்லாதது தெரியவந்ததும் மனஅழுத்தம் அடைந்தார். இதனால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேபோன்று, தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27 அன்று எஸ்.ஐ.ஆர். அறிவித்ததையடுத்து, வட 24 பார்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது பிரதீப் கர் அடுத்த நாள் தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்த குறிப்புகளுடன் ஒரு டைரியும், தற்கொலை நோட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலைகள் அனைத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் NRC (என்.ஆர்.சி) குறித்த அச்சத்தால் ஏற்பட்டவை எனக் கூறப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. எஸ்.ஐ.ஆர் பயத்தால் மாநிலத்தில் இது எட்டாவது சம்பவம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட எஸ்.ஐ.ஆர், பல மாவட்டங்களில் பதற்றத்தைத் தூண்டியுள்ளது, இது "அமைதியான வாக்காளர் நீக்கத்திற்கான" ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எஸ்.ஐ.ஆர் என்பது "சுத்தமான மற்றும் உண்மையான பட்டியல்களை உறுதி செய்வதற்காகத்தான் என பாஜக தெரிவித்துள்ளது.






