பார்க்கிங் பிரச்சினை: கார் டிரைவரை கத்தியால் குத்திய இளைஞர் கைது

முகமது ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் சுந்தர் நகரி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முகமது குவாமர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாரூக் என்ற இளைஞருக்கும் இடையே கடந்த செப்டம்பர் 15ம் தேதி மாலை கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷாரூக் தான் வைத்திருந்த கத்தியால் முகமது குவாமரை சரமாரியாக குத்தினார். இதில் , முகமது ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் முகமதுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஷாரூக்கை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ஷாரூக் நந்த நகரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அங்கு பதுங்கி இருந்த ஷாரூக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






