நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு - உ.பி.யில் அதிர்ச்சி

உயர்சிகிச்சைக்காக ராம்குமாரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள உத்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 23). கடந்த 20-ந்தேதி மாலை 6.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ராம்குமாரை கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல், ராம்குமார் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் நாய் கடித்தது பற்றி கூறியுள்ளார்.
நாய் கடித்த இடத்தில் மிக சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தினரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாய் கடித்த இடத்தை தண்ணீரில் கழுவிவிட்டு, அவர்களின் உள்ளூர் வழக்கப்படி காயத்தின் மீது மிளகாய்ப்பொடியை தடவியுள்ளனர். அதன் பிறகு ராம்குமார் வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.
ஆனால் இரவு 11 மணியளவில் அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாய் போல் ஊளையிட்டு சத்தம் போடத் தொடங்கியுள்ளார். அருகில் சென்றவர்களை அவர் கடிக்க முற்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ராம்குமாரின் குடும்பத்தினர், தங்கள் மத நம்பிக்கைப்படி பூஜை உள்ளிட்ட சில சடங்குகளையும் செய்துள்ளனர். ஆனால் ராம்குமாரின் நிலை மிகவும் மோசமானதால், அவரை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்தனர்.
இதையடுத்து அடுத்த நாள் மாலை ராம்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் ராம்குமாருக்கு ரேபிஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்து உயர்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






