மசாலா பத்திர விவகாரம்: பினராயி விஜயன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

கோப்புப்படம்
கடந்த 2019-ம் ஆண்டு கேரள அரசு மசாலா பாண்டு என்ற பெயரில் கடன் பத்திரங்களை வெளியிட்டது.
கொச்சி,
கேரள மாநிலத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மிகப்பெரிய மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் என்ற அமைப்பை கேரள அரசு வைத்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி திரட்ட வேண்டும் என்ற இலக்குடன் கேரள அரசு முதல்முறையாக மசாலா பாண்டு என்ற பெயரில் கடன் பத்திரங்களை வெளியிட்டது. அவற்றின் மூலம் ரூ.2 ஆயிரத்து 150 கோடி திரட்டியது.
பின்னர், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலம் வாங்குவதற்காக, மசாலா பத்திர நிதியை கேரள அரசு பயன்படுத்தியது. ஆனால் நிலம் வாங்குவது என்பது ரியல் எஸ்டேட் செயல்பாடு என்றும், அதற்கு மசாலா பத்திர நிதியை பயன்படுத்தக்கூடாது என்றும் அமலாக்கத்துறை கருதியது.
இந்த விவகாரத்தில், ரூ.467 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா), ரிசர்வ் வங்கி உத்தரவு ஆகியவற்றை மீறியதாக முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் நிதி மந்திரி தாமஸ் ஐசக், கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி கே.எம்.ஆப்ரஹாம் ஆகியோருக்கு கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதே சமயத்தில், அந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பினராயி விஜயன் உள்ளிட்ட 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனு, நீதிபதி வி.ஜி.அருண் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நோட்டீசை தொடர்ந்து 3 மாத காலத்துக்கு எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி வி.ஜி.அருண் இடைக்கால தடை விதித்தார். மேலும், மனுவுக்கு அமலாக்கத்துறை தனது பதிலை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விசாரணையை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.






