ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்டு: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்?


ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்டு:  மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய  மத்திய அரசு திட்டம்?
x

மாநில அரசின் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சட்டசபையில் இருந்து அனுப்பப்படும் மசோதாக்களுக்கு குறைந்தது 30 நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், அதனை ஜனாதிபதிக்கு அனுப்புவதாக இருந்தால் 90 நாட்களுக்குள் அனுப்பி விட வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் முழு விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள்து. மொத்தம் 414 பக்கங்கள் கொண்டதாக இந்த தீர்ப்பு உள்ளது. அதில் கவர்னருக்கு மட்டுமின்றி ஜனாதிபதிக்கும் மாநில அரசின் மசோதாக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், காலக்கெடு குறித்தும் வழிகாட்டுதலை கூறியுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 201-ன் கீழ், ஜனாதிபதி மாநில மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்கலாம் அல்லது அதனை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தலாம். ஆனால், 'வீட்டோ அதிகாரம்', அதாவது நிரந்தரமாக ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. மேலும், அரசியலமைப்பில் நேரடி காலவரையறை இல்லையென்றாலும், நியாயமான கால எல்லைக்குள் ஜனாதிபதியும் முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் கோட்பாடு. மசோதாக்களை தாமதிக்கின்ற நிலை, ஜனநாயகத்துக்கு எதிரானது.

சர்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் 2016-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி கவர்னரால் பரிந்துரைக்கப்படும் சட்டசபை மசோதாவை 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்கு மேல் தாமதமானால், தக்க காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஜனாதிபதிக்கு, தனக்கு வரும் மாநில அரசின் மசோதாக்கள், அரசியலமைப்பிற்கு முரணாகவோ அல்லது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவோ இருக்கும் என்று கருதினால் அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்கும் அதிகாரத்தைப் ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதிக்கும் மசோதா தொடர்பாக முடிவெடுக்க காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story