காணாமல் போன பெண்ணின் சடலம் 8 மாதங்களுக்குப் பின் மீட்பு - காதலன் கைது


காணாமல் போன பெண்ணின் சடலம் 8 மாதங்களுக்குப் பின் மீட்பு - காதலன் கைது
x

நிரூபமாவின் உடலை கைவிடப்பட்ட கல்குவாரியில் புதைத்ததாக தெபாசிஷ் வாக்குமூலம் அளித்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பராத்பூர் பகுதியை சேர்ந்த நிரூபமா பரிதா(வயது 22) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு கிளம்பிச் சென்ற நிரூபமா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவர் எங்கு சென்றார்? அவருக்கு என்ன ஆனது? என எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் ஜனவரி 27-ந்தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். நிரூபமாவின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் நிரூபமாவின் செல்போன் எண் திடீரென சுவிட்ச் ஆன் ஆகி சிறிது நேரம் இயங்கியது. இதனால் நிரூபமா உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதற்கிடையில், நிரூபமாவிற்கு தெபாசிஷ் பிசோய்(வயது 26) என்ற காதலன் இருந்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. தெபாசிஷ் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து தெபாசிஷை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது நிரூபமாவை கொலை செய்ததை தெபாசிஷ் ஒப்புக்கொண்டார். நிரூபமா தன்னை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்ததால், கோபத்தில் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், நிரூபமாவின் உடலை குர்டா மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் புதைத்ததாகவும் தெபாசிஷ் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் போலீசாரின் விசாரணையை திசைதிருப்புவதற்காக நிரூபமாவின் செல்போனை சுவிட்ச் ஆன் செய்ததாகவும் தெபாசிஷ் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிரூபமாவின் சடலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story