அம்பானி, அதானியின் விருப்பப்படியே மோடி செயல்படுகிறார்: ராகுல் காந்தி


அம்பானி, அதானியின்  விருப்பப்படியே மோடி செயல்படுகிறார்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 23 May 2024 11:13 AM GMT (Updated: 23 May 2024 11:19 AM GMT)

இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பா.ஜனதா சந்திக்க வேண்டியிருக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. ஐந்து கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும், ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 01-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில்,வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பேசிய அவர், "தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை.

இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை கடைசியாக பாஜக ஒத்துக்கொண்டுள்ளது. ஒருவேளை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அவர் பேசியுள்ளார்.


Next Story