மெகுல் சோக்சிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய மும்பை கோர்ட்டு மறுப்பு

மெகுல் சோக்சி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
மெகுல் சோக்சிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய மும்பை கோர்ட்டு மறுப்பு
Published on

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக வைர வியாபாரி மெகுல் சோக்சி மற்றும் அவரது உறவினர் நிரவ் மோடி உள்ளனர். இதில் மெகுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மெகுல் சோக்சியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்ற தனக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை ரத்து செய்யவேண்டும் என மெகுல் சோக்சி சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில், "தனக்கு எதிராக இந்தியாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்காகத்தான் நான் தற்போது பெல்ஜியமில் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். என்னை நாடு கடத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே என்னை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்ற அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்." என கூறப்பட்டு இருந்தது.

மெகுல் சோக்சியின் மனுவுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அவர் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை, நாடு கடத்தல் மனுவுக்கு எதிராக அவர் உள்ளதாகவும் தெரிவித்தது. இதையடுத்து மெகுல் சோக்சிக்கு எதிரான தேடப்படும் குற்றவாளி தொடர்பான மனுவை தள்ளுபடி மும்பை செய்ய சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com