தண்டவாளம் அருகே ரத்த காயங்களுடன் புதுப்பெண் பிணம்: கொலையா? என போலீசார் விசாரணை

ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் அருகில் புதுப்பெண் வித்யா, உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
தாவணகெரே,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வித்யா (வயது 25). சோமலாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் சிவு (27). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வித்யா, சிவு ஆகியோருக்கு திருமணம் முடிந்தது.
அதன்பிறகு தம்பதி பெங்களூரு சங்கராப்புரா பகுதியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வித்யா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவு, சங்கராப்புரா போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வித்யாவை தேடி வந்தனர். இந்தநிலையில் அன்றைய தினம் இரவு ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் அருகில் புதுப்பெண் வித்யா, உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் அரிசிகெரே போலீசார் வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் வித்யாவின் சாவுக்கு சிவு தான் காரணம். எனவே சிவுவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும் வித்யாவின் பெற்றோர் வரதட்சணை கொடுமையில் தங்களது மகளை சிவு கொலை செய்துவிட்டதாக கூறி சென்னகிரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த சென்னகிரி போலீசார் நேற்று சிவுவை கைது செய்தனர்.
வித்யாவை கொன்று உடல் தண்டவாளம் அருகே வீசப்பட்டதா? அல்லது ஓடும் ரெயிலில் இருந்து குதித்து வித்யா தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் கைதான சிவுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.