எத்தனை முறை கூறியும் கேட்கவில்லை... குப்பைகளை வீட்டு வாசலில் கொட்டி பாடம் புகட்டிய அதிகாரிகள்


எத்தனை முறை கூறியும் கேட்கவில்லை... குப்பைகளை வீட்டு வாசலில் கொட்டி பாடம் புகட்டிய அதிகாரிகள்
x

குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு பெருநகரத்திற்கு உட்பட்ட கங்காநகர் பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அந்தந்த பகுதிக்கு சென்று கழிவு மேலாண்மை துறையினர் சேகரித்து செல்கின்றனர். எனினும், சிலர் குப்பைகளை சாலையோரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெங்களூரு திடக்கழிவு மேலாண் துறையின் தலைமை செயல் அதிகாரி கரீ கவுடா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்று அலட்சியத்துடன் செயல்படும் நபர்களை வீடியோவாக பதிவு செய்து அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களின் வீட்டு வாசலின் முன் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வீட்டுக்காரர்கள் வெளியே வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, அவர்களிடம் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி எடுத்து கூறப்பட்டது. தெருவோரங்களில் குப்பைகளை போட கூடாது என்று அவர்கள் உணர்வதற்காகவும் மற்றும் இதனை திரும்ப செய்ய கூடாது என அவர்களுக்கு எடுத்து கூறுவதற்காகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அதிகாரி கரீ கவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, பெங்களூருவில் நாள்தோறும் 5 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் மற்றும் கழிவுகளை சேகரித்து செல்கின்றனர். எனினும், சிலர் கழிவுகளை தெருவோரங்களில் கொட்டுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதுபோன்ற நபர்களை வீடியோவாக பதிவு செய்தோம். அவர்களுக்கு பாடம் புகட்டவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாங்கள் அடையாளம் கண்ட நபர்களின் வீடுகளின் வாசலின் முன் கழிவுகள் கொட்டப்பட்டன.

இந்த நடவடிக்கை தொடரும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால், அதற்காக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறினார். இதுவரை 218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் ஒரே நாளில் ரூ.2.8 லட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story