‘வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன’ - பிரதமர் மோடி

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐசால்,
மிசோரம் மாநிலத்தின் முதல் ரெயில் பாதை உள்பட சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக லெங்போய் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக, திட்டமிட்டபடி லம்முவால் மைதானத்திற்கு அவர் செல்லமுடியவில்லை. இதையடுத்து காணொலி மூலம், திட்டங்களை தொடங்கி வைத்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மத்திய அரசின் கிழக்கு செயல்திட்டக் கொள்கையில் மிசோரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாதைகள் மிசோரம் மாநிலத்தை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும். பைராபி-சாய்ராங் ரெயில் பாதை, மாநில தலைநகர் ஐசாலை முக்கிய பெருநகரங்களுடன் இணைக்கும் என்பதால் இது மாநிலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும்.
இது வடகிழக்குப் பகுதி முழுவதிலும் கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும். மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாவை ஊக்குவிக்கும். முந்தைய காலங்களில் புறக்கணிக்கப்பட்டவர்கள் இப்போது முன்னணியில் உள்ளனர்.
சுதந்திர இயக்கமாக இருந்தாலும் சரி, தேசத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, மிசோரம் மாநிலம் இந்தியாவிற்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மிசோரம் மாநிலத்திற்கு தேசிய விளையாட்டுக் கொள்கை புதிய வாய்ப்புகளை வழங்கும்.
வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியின்போது, மருந்துகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்பட்டன. மருத்துவ வசதிகளின் விலை அதிகமாக இருந்தது. ஆனால் இன்று அவை மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு பாடம் கற்பித்தனர்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.






