பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் - இந்திய வெளியுறவு அமைச்சகம்


பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் - இந்திய வெளியுறவு அமைச்சகம்
x

அணுசக்தி மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசீம் முனீர் அமெரிக்காவுக்கு 2-வது முறையாக சுற்றுப்பயணம் செய்தார். டம்பாவில் பாகிஸ்தான் கவுரவ தூதரக அதிகாரியான தொழில் அதிபர் அட்னான் ஆசாத் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் அங்கிருந்தவர்களிடம் இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தகவல் வெளியானது. அதில் நம்நாடு ஒரு அணு ஆயுத நாடு. நாம் வீழ்ச்சி அடைகிறோம் என நினைத்தால் உலகின் பாதியை அழித்து விடுவோம். சிந்துநதியின் குறுக்கே இந்தியா அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம். அப்படி அணை கட்டினால் அதனை 10 ஏவுகணைகளை பயன்படுத்தி அழிப்போம். சிந்துநதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப்பற்றாக்குறை எதுவும் இல்லை என்று கொக்கரித்தார்.

ஆசிம் முனீரின் பேச்சு உலக நாடுகள் இடையே கவனம் பெற்ற நிலையில், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்றும் கூறி உள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;-

அமெரிக்கா சென்றிருந்த போது பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியதாக கூறப்படும் கருத்துகள் எங்கள் கவனத்திற்கு வந்தது. அணு ஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான வாய்ச்சவடால் தான்.அணுசக்தி மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான். அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம்.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story