புதிதாக திறந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை: தமிழகத்தை முந்திய பீகார்


புதிதாக திறந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை: தமிழகத்தை முந்திய பீகார்
x
தினத்தந்தி 7 Aug 2025 5:26 AM IST (Updated: 7 Aug 2025 12:39 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது? என்று நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

புதிதாக திறந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை பிஹார் முந்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது? என்றும் அதே காலக்கட்டத்தில் எவ்வளவு அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது? என்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சந்தோஷ் குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சகம், "கல்வித்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுப் பள்ளிகளை மூடுவதோ அல்லது திறப்பதோ மாநில அரசின் முடிவு தான்" என்று விளக்கம் அளித்துள்ளது. "இந்தியாவில் அதிகப்படியாக மத்திய பிரதேசத்தில் 6,972 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 2019-20 கல்வியாண்டில் 99,411-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24 கல்வியாண்டில் 92,439-ஆக குறைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இந்தியாவிலேயே அதிகப்படியான அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலமாக பீகார் உள்ளது.

பீகாரில் 2019-20 கல்வியாண்டில் 72,610-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24 கல்வியாண்டில் 78,120-ஆக உயர்ந்துள்ளது. அதாவது 5,510 அரசுப் பள்ளிகள் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது" என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,579-ல் இருந்து 37,672-ஆக உயர்ந்துள்ளது.

அதைபோல் மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சகம், அதிகப்படியாக ராஜஸ்தானில் 541 அரசுப் பள்ளிகளும், குறைந்தபட்சமாக ஆந்திரா மற்றும் புதுவையில் தலா 1 அரசுப் பள்ளியும் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை பட்டியலில், தமிழகம் இடம்பெறவே இல்லை.

1 More update

Next Story